Friday, October 17, 2008

முயற்சிகளுக்கப்பால்......

முயற்சிகளுக்கப்பால்......

முயற்சிகள் தோற்று
ஆழ்கடலில்
அமிழ்ந்த நொடியில்
அலையொன்று
கரையை நோக்கிச் செலுத்தியது.....

Thursday, July 10, 2008

அமைதியான கடல்...

அமைதியான கடல்

ஆர்ப்பரித்த கடல்
அமைதியாகி
அடக்கங்களின்
சலனங்கள்
நிர்ச்சலனங்களாகின்றன....

Tuesday, July 8, 2008

திருவள்ளுவர்
திருக்குறளில்
பரீட்சை எழுதப் போனார்.
பாவம் ஃபெயிலானார்...
ஏனெனில்-
அவர் படிக்கவில்லை
கோனார்.

---- இது என் நண்பர் பாலாஜி கிருஷ்ணகுமார் தமுஎச கலைஇலக்கிய நிகழ்ச்சியில் சொன்னது.
முதியோர் இல்லம்...

முதியோர் இல்லம் ஒழிப்போம்....
மேடையில் வீர முழக்கம்
அன்னையிடம்
ஆசி வாங்க் விரைந்தான்
முதியோர் இல்லத்திற்கு....
லேட்டஸ்ட் ஃபாஷன்....

ஏழை
கந்தல் துணி
அணிந்தால்....
பாவம்
அவன் ஒரு ஏழை....

அதையே
பணக்காரன்
அணிந்து மினுக்கிட்டால்
அதுதான்
லேட்டஸ்ட் ஃபேஷன்....

மழை

ஏழைகளின்
ஷவர்பாத்.

Saturday, July 5, 2008

உயரம்....

கவிதை - 112



நம்பிக்கை இரண்டாம் ஆண்டு கவிதைப்போட்டி - 2007 ஆறுதல் பரிசு பெற்ற கவிதை....

உயரம்.............. ரிஷி ரவீந்திரன்

அடிப்பெண்ணே … .

நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே.....!



உன் இதய நிலவில்

முதன் முதலாய் -

நான் காலடி எடுத்து வைத்ததால்

நானும் ஒரு ஆர்ம்ஸ்ட்ராங்கே...!



நீ -

பூ வாக இருக்க வேண்டிய நேரத்தில்

காயாக இருக்க வேண்டிய கணத்தில்

கனியாக இருக்க வேண்டிய நேரத்தில்

கனியவில்லை...



ஏனிந்த மெளனம்... ?

உன் மெளனத்தைக் கண்டு

நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

அழகான பெண்ணை

என்னவளை

இப்படி ஊமையாகப்

படைத்துவிட்டானே என்று...!



ஆனால் நீ-

அன்றொரு நாள்

கோடி வீட்டுக் குழந்தையிடம்

கொஞ்சியதைப் பார்த்திருக்கிறேன்....



மெளனத்தாலேயே நீ

என்னைக் கொல்கிறாய்....



நம் நாட்டில் இயேசு மட்டுமா

உயிர்த்தெழுகிறார்... ?

இறந்துபோன எத்தனையோ பேர்

உயிர்த்தெழுகின்றனர்-

ஓட்டுப்போட...!

நானும் என்றாவதொரு நாள்

இறந்துவிடுவேன்...

மீண்டும்

உயிர்த்தெழுவேன்-

உன் இதயத்தில்

அன்பு என்ற என் ஓட்டைப் போட....!

அப்பொழுது-

உன் இதயத்தினாழம் வரை

அன்பால் சாலை அமைப்பேன்.



நம்மிருவருக்குமிடையே

இருக்கும் காதலின் ஆழம்

வைரமுத்துவின் வரிகளில்

வானம் தொட்டுவிடும் தூரம்தான்....





என்

புதுப் பேனா

பிரசவிக்கும் முதல் வார்த்தை

உன் பெயரைத்தானே.... ?



பிள்ளையார் சுழிக்குப் பதிலாக

உன் பெயரைத்தானே சுழிக்கிறது... ?



அடிப் பெண்ணே

உன் பெயரை

ஒரு காகிதத்தில் எழுதியிருந்தால்

அழிப்பான் வைத்து அழித்திருப்பேன்.

என் கையில் பச்சைக் குத்தியிருந்தால்

தோலை அறுத்தெறிந்திருப்பேன்..

என் இதயத்திலல்லவா

எழுதியிருக்கிறாய்... ?



காவல் நிலை யம்

காணாமல் போனதைக்

கண்டுபிடித்துக் கொடுத்து உதவுமாமே.... ?



என் இதயம்

காணாமல் போனது...

புகார் கொடுத்தும்

ஏன் நடவடிக்கை இல்லை... ?



எனக்குத் தெரியும் நீ -

என்னைக் காதலிக்கிறாய்.





அன்றொரு நாள்

நீ கோலம் போடுவதை

ரசிப்பதில் லயித்திருந்தேன்....



உன்னை நோக்கி

வரும்பொழுது காலில் குத்திய

கல்லைப் பார்த்து

" ஆ... " என்றாயே...?



காலில் முள் குத்தினால்

கண்ணில் நீர் வருவதென்ன மாயம்... ?



நீ சுவாசித்து விடும்

மூச்சுக்காற்றைத்தானே

நானும் சுவாசிக்கிறேன்... ?

நீ ஒலிபரப்பும்

எண்ண கீதங்களைத்தானே

என் ஜீவ ரேடியோ

பண்பிரக்கம் செய்கிறது.... ?

உன் காலடிகளைப்

பின்பற்றித்தானே

என் காலடிகளும் தொடர்கின்றன... ?



நான் ஒரு நாத்திகன்...



இறையருள்

மிருகத்தையும் மனிதமாக்கிடுமாம்.

உன்னைக் காதலித்தபின்னரே

என்னுள்-

மனிதம் பிறந்தது...!



நம் ஐஐடியில்

நம் வகுப்புத் தோழிகளுடன் பேசியபொழுது

100 டிகிரி செல்சியஸாய்

பொரிந்தாயே.... ?



உனக்கு எம்.ஐ.டி ல் ஆராய்ச்சிமேற்படிப்பிற்கு

தேர்ந்தெடுக்கப்பட்டதை

என்னிடம் மட்டும் தானே

நம் வகுப்பில்

முதன் முதலில் சொன்னாய்..... ?



பிரிவு உபச்சார விழாவில்

கரும்பலகையில்

ட்யூப் லைட் வரைந்து அருகே

என் பெயர் எழுதியிருந்தாயே... ?



இன்று நாம்

காந்தத்தின் இரு

துருவங்களாக....!.



என்னிடம் கிரீன் கார்டு இல்லைதான்

நான் மஸ்சாசூட்டில்

ஆராய்ச்சி பண்ணவில்லைதான்...

ஆனாலும் பெண்ணே

நான் உன்னிடம் வைத்திருப்பதோ

சத்தியமான காதல் .....

சத்தியம் என்றும் தோற்பதில்லை....



இதோ இந்த நொடி கூட

என் இதயம்

உன் பெயரைத்தானே ஒலிபரப்புகிறது... ?



உண்மையான காதல்

உயர வைக்கும் பெண்ணே....



உருவத்தில் நான் -

உயராமலிருக்கலாம்...

எண்ணங்களில் நான்

உயர்கிறேன் பெண்ணே....

என்னை

உயர்த்தியது நீ தானே.... ?

_____________

பின்னோட்டங்கள்

உயரம்

மிக அருமையான கவிதை தன் காதலை மிகவும்

மனதைத் தொடும்படி சித்தரிதிருக்கிறார் முதல் வரியே

க்லக்கி விட்டார் " உன் இதய நிலவில்முதன் முதலாய்

நான் காலடி எடுத்து வைத்ததால்",,,,,,

எல்லா இடமும் எப்போழுதும் நடக்கும் சம்பவத்தை
வைத்து அருமையாகப் படைத்திருக்கிறார் பத்து மார்க்கே கொடுக்கலாம் ஆனால் முழு மார்க் கொடுக்கலாமோ என்று தெரியவில்லை ஆகையால்

உண்மையான காதல்

உயர வைக்கும் பெண்ணே....



உருவத்தில் நான் -

உயராமலிருக்கலாம்...

எண்ணங்களில் நான்

உயர்கிறேன் பெண்ணே....

என்னை

உயர்த்தியது நீ தானே.... ?



நச்சென்ற கிளைமேக்ஸ்



கவிதையில் பின்னூட்டம் தர அதிகம் எதுவும் இல்லை. எல்லா காதல் கவிஞர்களும் புலம்பும் அதே புலம்பலே.

'உயரம் ' என்பதாலா கவிதை வஞ்சனையின்றி வளர்ந்து நிற்கின்றது!

கெஞ்சிக்கொண்டே இருந்தால் எப்படி ?!! நான் என்னவெல்லாம் காதலுக்கு செய்தேன் என்று பட்டியல் போடக்கூடாதாக்கும்!!.....ஒவ்வொரு கணமும் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணவைக்கவேண்டும் அவளை/னை!! அதுதானே காதல்......



உயரம் காதல்!! சிகரம் தொட வாழ்த்துக்கள்

உருவத்தில் இவர் உயராமல் இருக்கலாம்.. ஆனால் இவர் கதையோ மலை போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது....

ஒருதலைக்காதலோ? வெளிநாடு போனதும் மறந்தால் அப்புறம் என்ன அது காதல் ? அந்தஸ்தைப் பார்த்துத் தான் வருமா ? புரியலியே ?

பெண் அமைதி காத்த‌தால் அவளை ஊமையாய் படைத்தானோ அந்த பிரம்மன் என கோபத்திற்குப் பதில் வியப்பு எட்டிப்பார்க்கிறது இக்கவிதையில்..

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ரகம் நம் கவிஞர்..

காதல் ஒலிபரப்பிற்கான வானொலி தயாராகிக் கொண்டிருக்கிறது கவிஞரிடம்..

ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்..ந‌ம் க‌விஞ‌ருக்கு அப்பெண் இங்கே காத‌லியாக..

வானம் தொட்டுவிடும் தொலைவில் , ஆனால் காந்தத்தின் இரு துருவமாய் உள்ள இக்காதல் விரைவில் வாழ்வைத் தொட வாழ்த்துக்கள்..

கொஞ்சம் மொழிக்கலப்பு இன்றி இருந்தால் நலமாகுமே என்பது என் தாழ்மையானக் கருத்து..

நன்றி
- Show quoted text -



--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---

கண்ணில் தெரியும் கதைகள்...


கண்ணில் தெரியும் கதைகள்....


கண்மூடித்
தவத்திலிருந்தேன்.
பட்டாம்பூச்சி
என் கையிலமர்ந்தது.
தவம் கலைத்து
ரசித்துப்பார்த்தேன்.
அதனை அன்பால் தடவிட
அருகே கரம் நகர்த்தினேன்
பறந்துபோனது
மனம்
கனத்துப்போனது...!